by Staff Writer 16-04-2019 | 7:36 PM
Colombo (News 1st) சில பகுதிகளில் மழை பெய்கின்ற போதிலும் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள நீர்த்தேக்கங்களுக்கு இதுவரையில் போதுமானளவு மழை வீழ்ச்சி கிடைக்கவில்லை.
நீர் மின் உற்பத்தி தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால், சித்திரைப் புத்தாண்டு விடுமுறை நிறைவடைந்து மீண்டும் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படவுள்ள ஏப்ரல் 22 ஆம் திகதிக்கு பின்னர், மின் விநியோகம் தொடர்பில் சிக்கல் ஏற்படலாம் என பல தரப்பினரும் சந்தேகிக்கின்றனர்.
இம்மாத இறுதிக்குள் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ள மூன்று தனியார் அனல் மின் நிலையங்களில் இருந்து பெறப்படும் 100 மெகாவாட் மின்சாரம், தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளதாக மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.
எனினும், நிலவும் கேள்விக்கு அமைய மின்சாரம் போதுமானதாக காணப்படுமா என்ற சந்தேகம் நிலவுவதாகவும், இதற்கு முன்னர் அமுல்படுத்திய மின்வெட்டு காலப்பகுதியை விட குறைந்த நேரம் மின்சாரத்தை துண்டிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறான நிலை ஏற்படாது என, இது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.