நோட்ர டாம் தேவாலய புராதன சின்னங்கள் மீட்பு

நோட்ர டாம் தேவாலய புராதன சின்னங்கள் மீட்பு: மீளக்கட்டியெழுப்ப 100 மில்லியன் யூரோக்கள் அன்பளிப்பு

by Bella Dalima 16-04-2019 | 9:48 PM
Colombo (News 1st) பிரான்ஸின் இதயமென வர்ணிக்கப்படுகின்ற நோட்ர டாம் தேவாலயத்தில் இன்று பரவிய தீ உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது அவரது தலையில் அணிவிக்கப்பட்ட முள்முடி இந்த தேவாலயத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. 850 வருடங்களுக்கு மேல் பழமைவாய்ந்த நோட்ர டாம் தேவாலயத்தில் பிரான்ஸ் நேரப்படி நேற்று பிற்பகல் 4.30-க்கு தீ பரவியது. துரிதமாக பரவிய தீ தேவாலயத்தின் கூரை வரை எட்டியது. நோட்ர டாம் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்த பணிகள் காரணமாக தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீ பரவி 9 மணித்தியாலங்களுக்கு மேலும் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை. தேவாலயத்தில் கொதிக் பாணியிலான கட்டடத்தின் இரண்டு கோபுரங்கள் உள்ளடங்கலாக கற்களினாலான அமைப்பை பாதுகாப்பதற்கு தீயணைப்பு படையினரால் முடிந்தாலும், தேவாலயத்தின் கூரை மற்றும் மேற்பகுதியில் பிரமிட் வடிவில் அமைக்கப்பட்டிருந்த பகுதி தீயினால் முற்றிலும் அழிவடைந்துள்ளது. தேவாலயத்திற்குள் இருந்த புராதன சின்னங்கள், இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைவதற்கு முன்னதாக அணிவிக்கப்பட்டிருந்த முள் முடி ஆகியவற்றை தீயணைப்பு படையினர் எவ்வித சேதமும் இன்றி மீட்டுள்ளனர். பிரான்ஸின் ஒன்பதாவது லுவி மன்னர் இயேசு கிறிஸ்துவின் முள் முடியை பாரிஸ் நகருக்கு கொண்டுவரும்போது அணிந்திருந்த அங்கியும் இதன்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்ட 400 படை வீரர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், தேவாலயத்தின் உள்ளக அமைப்புகள் உடைந்து வீழும் அபாயம் இன்னமும் தணியவில்லை என பிரான்ஸ் தீயணைப்பு பிரிவின் பிரதம அதிகாரி ஜின் க்லொய்ட் கெலட் தெரிவித்துள்ளார். நோட்ர டாம் தேவாலயத்தில் தீ பரவிய சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பாரிஸ் நகர மக்களும் சுற்றுலாப் பயணிகளும் சேன் நதி மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் இருந்தவாறு சம்பவத்தை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். உலகத் தலைவர்கள் இந்த சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் மக்களுக்கு அனுதாபத்தை தெரிவித்துள்ளதுடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் இந்த சம்பவம் பிரான்ஸ் மக்களில் ஒரு பகுதியினர் தீக்கிரையாவதை பார்த்துக்கொண்டிருப்பதற்கு நிகரானது என கவலை வௌியிட்டுள்ளார். தேவாலயத்தை புனரமைப்பதற்காக ஏற்கனவே நிதியமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பிரான்சுவா ஹென்ரி ஜினோல்ட் எனும் வர்த்தகர் இதற்காக 100 மில்லியன் யூரோக்களை அன்பளிப்பு செய்துள்ளார். தேவாலயத்திற்கு ஏற்பட்ட சேதம் முழு உலகிற்கும் ஏற்பட்ட பாதிப்பு எனவும் இந்த சம்பவம் தொடர்பில் தாம் உள்ளிட்ட இலங்கை மக்கள் பிரான்ஸ் மக்களுக்கு கவலையை தெரிவித்துக்கொள்வதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உலக மரபுரிமையான இந்த தேவாலயத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு இலங்கையர்கள் என்ற வகையில், ஏதேனும் ஒத்துழைப்பை வழங்க முடியுமாயின் அதனை செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.