தீக்கிரையான தேவாலயம் மீளக்கட்டியெழுப்பப்படும்

தீக்கிரையான தேவாலயம் மீளக்கட்டியெழுப்பப்படும் - பிரெஞ்சு ஜனாதிபதி உறுதி

by Staff Writer 16-04-2019 | 1:53 PM
Colombo (News 1st) பிரான்ஸில் தீ ஏற்பட்டதில் சேதமடைந்த நோட்ரே டேம் தேவாலயம் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என அந்நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் உறுதியளித்துள்ளார். சுமார் 850 ஆண்டுகள் பழமையான இந்தத் தேவாலயத்தில் நேற்று (15) திடீரென தீ பரவியுள்ளது. இதில் தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் மதில் சுவர்கள் தீக்கிரையாகி இடிந்து வீழ்ந்துள்ளன. எனினும், இரண்டு மிகப்பெரிய மணிக்கூண்டு கோபுரங்கள் உள்ளிட்ட தேவாலயத்தின் முக்கிய பகுதி தீயிலிருந்து தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தீ பரவி சுமார் 9 மணித்தியாலங்களின் பின்னரே முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பின்னர் சம்பவ இடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன், மிகவும் மோசமான இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார். அத்துடன், புகழ்பெற்ற இந்த தேவாலயத்தை மீண்டும் புதுப்பிக்க சர்வதேச அளவில் நிதி திரட்டும் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.