திகன்னேவ கிராமத்தில் நியூஸ்ஃபெஸ்ட்டின் புத்தாண்டுக் கொண்டாட்டம்

by Staff Writer 16-04-2019 | 8:15 PM
Colombo (News 1st) குருநாகல் மாவட்டத்தின் கொடவெகர - திகன்னேவ கிராமத்து மக்களுடன் நியூஸ்ஃபெஸ்ட் இன்று தமிழ் - சிங்கள புத்தாண்டைக் கொண்டாடியது. பசுமையான வயல் நிலங்கள் சூழ்ந்த திகன்னேவயில், மிகக்குறைந்த வசதிகளுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த கிராமத்தின் மக்கள் காட்டு யானைகளினாலும் அவ்வப்போது அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். குறைந்த போக்குவரத்து வசதிகளையுடைய இந்த கிராமத்தின் வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில், கொடவெகர - திகன்னேவ ஶ்ரீதேவமித்ர விளையாட்டரங்கில் இன்று நாள் முழுவதும் போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. திகன்னேவ, கும்புக்வெவ, நூகன்னொடுவ, குருபொக்குன, நெபேடேவ , தெமட்டேவ, கொட்டவெகர உள்ளிட்ட 20 கிராமங்களை சேர்ந்த மக்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். இன்று காலை சைக்கிள் ஓட்டப் ​போட்டியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. 115 கிலோ மீட்டர் போட்டி தூரத்தை இலங்கை இராணுவத்தின் ஹிரான் பசிந்து முதலில் கடந்தார். மகளிர் மற்றும் ஆண்களுக்கான மரதன் ஓட்டத்தில் அஸ்மிகா ஹேரத் மற்றும் பி.எம்.கே.ஜி.தென்னகோன் ஆகியோர் வெற்றிவாகை சூடினர். விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண வைபவம் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர்களான ஷெவான் டேனியல் மற்றும் எஸ்.சி.வீரசேகர ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. நிக்கவெரட்டிய பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட அதிதிகள் பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். ஓலை வேயும் போட்டி, தலையணை சண்டை, சறுக்கு மரம் ஏறுதல், சட்டி உடைத்தல் உள்ளிட்ட 40-இற்கும் மேற்பட்ட போட்டி நிகழ்ச்சிகள் இன்று நடத்தப்பட்டன. தேவமித்ர விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த 'S-lon இனிப்பு கிராமம்' விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் கவர்ந்திருந்தது. சித்திரை புத்தாண்டிற்கான பலகாரம் தயாரிக்கும் போட்டியும் நடத்தப்பட்டதுடன், இளைஞர்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியும் நாள் முழுவதும் நடத்தப்பட்டது. சிறுவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவின் இறுதி அங்கமாக ஆணழகர் மற்றும் அழகு ராணி போட்டிகள் நடத்தப்பட்டன.