ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்காக மேலதிக பொலிஸ் குழு நியமனம்

by Staff Writer 16-04-2019 | 7:10 AM
Colombo (News 1st) அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் முதற்கட்ட விசாரணைகளுக்காக மேலதிக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரிடம் முன்வைத்த ​கோரிக்கைக்கு இணங்க மேலும் 6 பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவில் 18 உத்தியோகத்தர்கள் அடங்குகின்றனர். இதேவேளை, ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும் 22 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் ஔடத கொள்வனவின்போதும் பசு இறக்குமதியின்போதும் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடு குறித்தும், காப்புறுதி தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்தும் சாட்சி விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இதனிடையே, கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு இணங்க, முதற்கட்ட விசாரணைகளுக்காக அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆணைக்குழு முன்னிலையில் அடுத்த சில வாரங்களுக்குள் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.