சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் 11 கொலைச் சம்பவங்கள் பதிவு

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் 11 கொலைச் சம்பவங்கள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

16 Apr, 2019 | 9:13 pm

Colombo (News 1st) சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் 11 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை கடற்படை முகாமிற்கு அருகாமையில் இன்று முற்பகல் இளைஞர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞர் நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது, குறுக்கு வீதியொன்றில் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், பின்னால் இருந்த நபர் இளைஞரின் கழுத்தை அறுத்துள்ளார்.

படுகாயங்களுக்குள்ளான இளைஞர் திருகோணமலை கடற்படை முகாமிற்கு அருகாமையிலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு சென்ற காட்சிகள் CCTV-இல் பதிவாகியுள்ளது.

கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதிக்கு குறித்த இளைஞர் செல்ல முயன்ற போது, அவ்விடத்திலேயே கீழே வீழ்ந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து இளைஞர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்திருந்தார்.

21 வயதான தங்கதுரை தனுஷன் என்ற இளைஞரே இவ்வாறு கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

காதல் தொடர்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை, இளைஞரை கொலை செய்த நபர், தனது தந்தையுடன் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கொலன்ன – உல்ஹதுவாவ, கஸ்தானகஹவத்த பகுதியில் நேற்று (15) மாலை பொல்லால் தாக்கி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியொன்றை பார்வையிடுவதற்கு தயாரான சந்தர்ப்பத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

17 வயதான பவந்த பிரசாத் அபேகோன் சென்ற இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட இளைஞரின் 22 வயது நண்பரும் தாக்குதலில் காயமடைந்த நிலையில், கொலன்ன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலையை மேற்கொண்ட நபர்கள் இதுவரையில் அடையாளங்காணப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாத்தளை – கலேவெல, தேவஹூவ, எகேஎல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்த தம்பதியினர் நேற்றிரவு கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினையொன்று காரணமாக இந்த கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

53 வயதான அனுலா சுரவீர மற்றும் 51 வயதான காமினி சுரவீர ஆகிய தம்பதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

அனுராதபுரம் – இபலோகம, வேதணிய பிரதேசத்திலுள்ள சூதாட்ட நிலையமொன்றில் இரு தரப்பினருக்கு இடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

குருநாகலைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 62 வயதான ஆர்.டி.பிரேமசிறி என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

இபலோகமவில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களுள் உயிரிழந்த நபரின் மகனும் அடங்குவதாக செய்தியாளர் கூறினார்.

 

ஹிங்குரக்கொட – நாகபொக்குண, ஜயந்திபுர பிரதேசத்தில் பெண் ஒருவர் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு முற்றியதால், குறித்த பெண்ணை தாக்கி கணவரே கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஒரு பிள்ளையின் தாயான 25 வயதான தினுஷா சந்திரசேனவே கொலை செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்