பாரிய தொகை ஹெரோயினுடன் 09 ஈரானியர்கள் கைது

100 கிலோவுக்கும் அதிக ஹெரோயினுடன் 09 ஈரானியர்கள் கைது

by Fazlullah Mubarak 15-04-2019 | 7:57 AM

100 கிலோகிராமிற்கு அதிக ஹெரோயினுடன் ஈரானிய பிரஜைகள் 09 பேர் இந்திய கடல் எல்லையில் இந்திய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 500 கோடி இந்திய ரூபாய்கள் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய பாதுகாப்பு தரப்பினர் தம்மை பின்தொடர்வதை தெரிந்துகொண்டு குறித்த ஈரானிய பிரஜைகள் சாட்சிகளை அழிக்கும் நோக்கில் தமது படகுக்கு தீ மூட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் விரைந்து செயற்பட்ட கடலோர பாதுகாப்பு பிரிவினர் பாரிய முயற்சிக்கு பின் படகிலிருந்து 100 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது தீயூட்டப்பட்ட படகு கடலில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 24ம் திகதி ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய சிறிய படகொன்றுடன் ஈரானிய பிரஜைகள் 09 பேர் தெற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை நினைவுகூரத்தக்கது. குறித்த படகிலிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 107 கிலோ 22 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 09 ஈரானிய பிரஜைகளும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.