புத்தாண்டுக்கு தலைமைகளின் வாழ்த்து

புத்தாண்டுக்கு தலைமைகளின் வாழ்த்து

by Fazlullah Mubarak 14-04-2019 | 5:27 PM

மலரவுள்ள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது வாழ்த்துச் செய்திகளை வௌியிட்டுள்ளனர்.

அடைந்திருக்கும் வெற்றியின் பலன்களை அனுபவிப்பதுடன் தேசிய இலக்குகளை அடைவதற்கு இந்த புத்தாண்டில் ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணைவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டு எனும் உயரிய கலாசார பண்டிகையானது, சந்தை பொருளாதார கோட்பாடுகளின் பாரிய தாக்கங்களுக்கு உள்ளாகியிருக்கும் இந்த காலத்தில் அதை கடந்து இப் பண்டிகையின் உள்ளார்ந்த பண்புகளை புரிந்துகொள்ள முயற்சித்தல் அவசியமாகின்றது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இயற்கையின் குழந்தைகளாகிய நாமே இயற்கையை நமக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாக கருதி அதற்கு இடையூறு செய்வதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதனால் ஏற்பட்டுள்ள பாதகங்களை உணர்ந்து இயற்கையுடன் ஒன்றரக் கலந்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணரவேண்டிய ஒரு காலக்கட்டத்திலேயே நாம் அடியெடுத்து வைக்கின்றோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரை அடைந்திருக்கும் வெற்றியின் பலன்களை அனுபவிப்பதுடன் தேசிய இலக்குகளை அடைவதற்கு இந்த புத்தாண்டில் ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணைவோம் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், சித்திரை புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடும் நாட்டு மக்களுக்கும் புலம் பெயர்ந்து வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் சௌபாக்கியமும் சமாதானமுமிக்க இனிய சித்திரை புத்தாண்டுக்கான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி ஒட்டுமொத்த இலங்கை சமூகத்தினரும் ஒன்றிணைந்து கொண்டாடும் புத்தாண்டு எமது வாழ்வினதும் சமூகத்தினதும் மறுமலர்ச்சிக்கான தேசிய கலாசார திருவிழாவாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புத்தாண்டு சம்பிரதாயங்களின் உண்மையான அர்த்தங்களை புரிந்துகொண்டு மானிடத்தை மேம்படுத்துவதற்கான, வாழ்வில் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான அபிலாஷையுடன் அவற்றை பின்பற்றுவது மிகவும் முக்கியமானதாகும் எனவும் பிரதமர் கூறியுள்ளார். இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, செழுமை மிகுந்த இனிய புத்தாண்டாக அமையட்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துவதாக பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். வளமான கலாசார உரிமைகளை உலகத்தாருடன் பரிமாற்றிட இயலுமான மேடையை ஸ்தாபித்து கொடுக்கும் புது வருடம் ஒருவருக்கொருவர் இடையிலான தொடர்புகளை மேலோங்கச் செய்து அதற்குண்டான சூழலை உருவாக்கிட திடசங்கற்பம் பூணுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ விடுத்துள்ள புது வருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இலங்கை அபிவிருத்தி நோக்கி செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியுமாயின் அது தொடர்பில் சிந்திக்க தலைப்பட வேண்டும் என்று மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சிந்தனைகளில் மாற்றமும் இலங்கையர்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் என பிரார்த்தித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அடுத்தவர்களிடம் அதனை எதிர்பார்ப்பதற்கு முன் தம்மிடையே அதனை ஏற்படுத்த ஆரம்பிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறப்பெற்று இந்த நாட்டில் நிரந்தர அமைதியும் நீதியும் நிலைநாட்ட இந்நன்னாளில் இறைவனை வேண்டுவதாக, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டானது நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு என்பவை தமிழ், சிங்கள சமூகங்களுக்கு இடையில் மேம்பட கிடைத்த ஒரு வரப்பிரசாதமான பண்டிகையாகும் எனவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், துரதிஸ்டவசமாக எமது நாட்டில் அத்தகைய நம்பிக்கையை கடந்த காலங்களில் கட்டியெழுப்ப முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தாண்டு நாளில் அற்ப அரசியல் இலாபங்களை கருத்திற்கொள்ளாது, எமது நாட்டினை முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்லும் ஒரே நோக்கத்துடன் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என நாட்டின் அரசியல் தலைவர்களை அழைத்து நிற்க விரும்புவதாகவும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.