வவுனியாவில் 38.3 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவு

by Staff Writer 13-04-2019 | 3:57 PM
Colombo (News 1st) இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் வவுனியாவில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. 38.3 பாகை செல்சியஸாக வவுனியாவில் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலன்னறுவையில் 37.5 பாகை செல்சியஸூம் குருணாகலில் 37.2 பாகை செல்சியஸூம் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நாளை மறுதினம் (15) வரை நாட்டின் பல பகுதிகளிலும் கடும் வெப்பத்துடனான வானிலை நிலவும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இன்றும் (13) நாளையும் (14) வடகிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை, கம்பஹா, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் கடும் வெப்பம் நிலவும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.