இலங்கை தமிழர்கள் வாழ்வை வளமாக்க வேண்டும்

தமிழகத்தில் தீவிர பிரசாரம்: இலங்கை தமிழர்கள் வாழ்வை வளமாக்க வேண்டுமென மோடி தெரிவிப்பு

by Bella Dalima 13-04-2019 | 8:38 PM
Colombo (News 1st) ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்திய மக்களவைத் தேர்தலில் தமிழகத்திற்கான வாக்குப்பதிவு எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் நான்கு இடங்களில் நேற்று (12) பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று அங்கு சென்றுள்ளார். தமிழகத்தின் தேனிக்கு இன்று சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இராணுவ வீரர்கள் முதல் விவசாயிகள் வரை அனைவரும் மகிழ்ச்சியாக வாழும் புதிய இந்தியாவை நோக்கி நாடு நகர்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும்,
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மண் இது. அந்த மகத்தான தலைவர்கள் தீட்டிய திட்டங்களால் ஏழை மக்கள் பயனடைந்தனர். அவர்களை நினைத்து இந்தியா பெருமைகொள்கிறது. காங்கிரஸ் - தி.மு.க இணைந்துகொண்டு நமது நோக்கத்தை திசை திருப்புகின்றன. கடந்த கால கசப்புகளை எல்லாம் மறந்து காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி அமைத்திருக்கிறது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், ராகுலை பிரதமராக முன்மொழிந்தார். ஆனால், அந்த மேடையில் இருந்த கூட்டணிக் கட்சியை சார்ந்தவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அந்தக் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியின் தலைவருக்கும் தான் பிரதமராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
என நரேந்திர மோடி கூறியுள்ளார். இலங்கையில் உள்ள தமிழ் சகோதரர்கள் வாழ்வை வளமாக்க வேண்டும். வாரிசு அரசியல், ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமிழகத்தின் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று (12) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். தேனியில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு ராகுல் காந்தி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ் மொழி, தமிழக மக்கள், தமிழ் மக்களின் கலாசாரம், தமிழகத்தின் வரலாற்றை தான் மதிப்பதாகவும் நரேந்திர மோடி தமிழக மக்களின் மீது ஒற்றைக் கலாசாரத்தை திணிக்க முயல்வதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுடனான தனது உறவு அரசியல்பூர்வமானது அல்ல, உணர்வுப்பூர்வமானது எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், இராணுவத்தின் பெயர் அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, குடியரசுத் தலைவருக்கு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கடிதம் எழுதிய விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இராணுவத்தை அரசியல் இலாபத்திற்கு அரசியல்வாதிகள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு 150 முன்னாள் இராணுவ அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளதாக 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது. இந்த கடிதத்தை தாம் எழுதவில்லை என முன்னாள் இராணுவ ஜெனரல் S.F.ரோட்ரிக்ஸ், முன்னாள் விமானப்படைத் தளபதி N.C. சூரி ஆகியோர் தெரிவித்துள்ளனர். அத்துடன், இவ்வாறான கடிதம் எதுவும் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு வரவில்லை என குடியரசுத் தலைவர் அலுவலகம் மறுத்துள்ளதாகவும் 'த ஹிந்து' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பல கோரிக்கைகள் அடங்கிய அந்தக் கடிதம் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. வாக்குகளைப் பெறுவதற்காக இராணுவத்தை அரசியல் இலாபத்திற்காக பா.ஜ.க தலைவர்கள் பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பிரதமர் மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் இராணுவத்தின் நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு பிரசாரம் செய்வதாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி குறிபிட்டுள்ளார். இராணுவத்தின் பெயரை அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்துவதாக எழுதப்பட்ட போலி கடிதம் தொடர்பில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருதை வழங்கவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். ரஷ்ய - இந்தியா உறவை வலுப்படுத்த சிறப்பாக செயற்பட்டதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக புதின் குறிப்பிட்டுள்ளார். இந்த கௌரவ விருது வழங்கப்படுவது தொடர்பில் பிரதமர் மோடி, ரஷ்ய ஜனாதிபதி மற்றும் ரஷ்ய மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.