மூன்று தசாப்தங்களின் பின்னர் சொந்த மண்ணில் புத்தாண்டைக் கொண்டாடத் தயாராகும் வலிகாமம் தெற்கு மக்கள்

மூன்று தசாப்தங்களின் பின்னர் சொந்த மண்ணில் புத்தாண்டைக் கொண்டாடத் தயாராகும் வலிகாமம் தெற்கு மக்கள்

எழுத்தாளர் Staff Writer

13 Apr, 2019 | 8:14 pm

Colombo (News 1st) கடந்த வருடம் இதேபோன்றதொரு நாளில் யாழ் – வலிகாமம் தெற்கு மக்கள் மூன்று தசாப்தங்களின் பின்னர் சொந்த நிலத்தில் காற்தடம் பதித்தனர்.

இதுவரை காலம் சொந்த நிலத்தில் தவறவிட்ட புதுவருட கொண்டாட்டங்களை இம்முறை மகிழ்வுடன் எதிர்கொள்வதற்கு இம்மக்கள் தயாராகி வருகின்றனர்.

1990 ஆம் ஆண்டு முதல் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட 683 ஏக்கர் காணி கடந்த வருடம் விடுவிக்கப்பட்டது.

முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்நாளைக் கழித்த சுமார் 300 குடும்பங்களுக்கான காணியே கடந்த வருடம் விடுவிக்கப்பட்டது.

இங்கு வீட்டுத்திட்டப் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதுடன், இங்குள்ள காசி பூதவராயர் ஆலயத்தின் புனருத்தாபனப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பூர்வீகக்காணியில் மீள்குடியேறிய பூரிப்புடன், சித்திரைப் புத்தாண்டை வரவேற்க இங்குள்ள குடும்பங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

சிறிய குடிசைகளானாலும் மாவிலை தோரணம் கட்டி, கதவு நிலைகளுக்கு மஞ்சள், சந்தனம் பூசி, புத்தாடைகளை பிள்ளைகளுக்கு அணிவித்துப் பார்த்து புத்தாண்டை எதிர்கொள்ள இவர்கள் காத்திருக்கின்றனர்.​

நிரந்தர வீடுகள் இதுவரை கிடைக்காதவர்கள், புதிய வீடுகளில் குடியேறியவர்கள் என்ற வேறுபாடின்றி, சொந்த நிலத்தில் புத்தாண்டைக் கொண்டாடுவது இங்குள்ள அனைவருக்கும் மகிழ்வைக் கொடுத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்