விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உலக வங்கி 125 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

by Staff Writer 12-04-2019 | 6:08 PM
Colombo (News 1st) இலங்கையில் வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 125 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த கடன் உடன்படிக்கை அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி R.H.S. சமரதுங்க, உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் ஹாட்விக் ஷபர் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். எதிர்வரும் 14 ஆம் திகதி வரை அமெரிக்காவின் வொஷிங்டனில் நடைபெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்திற்கு இணையாகவே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நிதி அமைச்சர் மங்கள சமவீர அமெரிக்கா சென்றுள்ளதுடன், அவர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார். இதேவேளை, காலநிலை மாற்றத்தின் போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான திட்டங்களுக்கு உலக வங்கியின் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி 1.8 மில்லியன் அமெரிக்க டொலர் மானியம் வழங்க தீர்மானித்துள்ளது.