பிச்சைக்காசிலும் 100 ரூபாவை அறவிடும் அரசாங்கம்: நாமல் கருணாரத்ன குற்றச்சாட்டு

by Bella Dalima 12-04-2019 | 8:01 PM
Colombo (News 1st) புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் தௌிவுபடுத்துவதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு தம்புள்ளையில் இன்று நடைபெற்றது. அகில இலங்கை கமநல சம்மேளனம் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது கருத்துத் தெரிவித்த அகில இலங்கை கமநல சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன, மக்களுக்கான 2000 ரூபா பிச்சைக் காசிலும் 100 ரூபாவை அரசாங்கம் அறவிடுவதாகக் குற்றம் சாட்டினார். விவசாய ஓய்வூதியத்திலும் 50 ரூபாவை வெட்டி அப்பாவி விவசாயிகளின் சொற்ப பணத்தையும் அரசாங்கம் சூறையாட ஆரம்பித்துள்ளதாக நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார். மத்திய வங்கியை சூறையாடி, நாட்டின் பணத்தை விழுங்கியவர்கள் தற்போது தொழிற்சாலைகளை அமைப்பதாகவும், குளியாப்பிட்டியவில் கார் உற்பத்தி செய்வதாகவும் நாமல் கருணாரத்ன சுட்டிக்காட்டினார். அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக கோடிக்கணக்கில் செலவிட்டு சொகுசு வாகனங்களை வாங்க குறைநிரப்பு பிரேரணைகளை சமர்ப்பிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.