அரசியல் தலைவர்களின் கால்களை முத்தமிட்ட போப்

தென் சூடானில் அமைதியை நிலைநாட்டக் கோரி ஆளும், எதிர்க்கட்சித் தலைவர்களின் கால்களை முத்தமிட்ட போப் பிரான்சிஸ்

by Bella Dalima 12-04-2019 | 5:18 PM
Colombo (News 1st) தென் சூடானில் நிலவும் சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி போப்பாண்டவர் பிரான்சிஸ் சூடானின் அதிபர் சல்வா கிர் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான ரீக் மக்கார் உள்ளிட்டோரின் கால்களை முத்தமிட்டுள்ளார். போருக்குக் காரணமான தலைவர்கள் தமக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து, வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என போப்பாண்டவர் கோரிக்கை விடுத்துள்ளார். புனித வியாழன் அன்று போர்க்கைதிகளின் கால்களை சுத்தப்படுத்தி, முத்தமிடுவது போப்பின் வாடிக்கை. ஆனால், முதன்முறையாக அரசியல் தலைவர்களின் கால்களை முத்தமிட்டு, சமாதானத்தை வலியுறுத்தியுள்ளார். இந்நிகழ்ச்சியில் சூடான் நாட்டின் அதிபர் சல்வா கீர், எதிர்க்கட்சித் தலைவர் ரீக் மச்கார், மூன்று துணை அதிபர்கள் பங்கேற்றுள்ளனர். போப்பாண்டவர் இவர்கள் அனைவரின் கால்களையும் முத்தமிட்டுள்ளார்.
பகைமையும் விரோதமும் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும். தற்காலிக போர் நிறுத்தம் மதிக்கப்பட வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி களையப்பட வேண்டும். நாட்டின் பிரஜைகள் நிம்மதியாக இருக்க நீடித்த அமைதி நிலவவேண்டும். வலுவான நாட்டை உருவாக்க வேண்டும், அதுவே என்னுடைய கனவு
என்று போப்பாண்டவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டில் சூடானிலிருந்து சுதந்திரம் பெற்ற தெற்கு சூடானில் 2013 ஆம் ஆண்டில் சிவில் யுத்தம் ஆரம்பமானது. யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு உயிரிழந்துள்ளனர்.