திறந்து 5 நாட்கள் கூட கடக்காத போதும் மழைக்கு தாக்குப்பிடிக்காத பெலியத்த ரயில் நிலையம்

திறந்து 5 நாட்கள் கூட கடக்காத போதும் மழைக்கு தாக்குப்பிடிக்காத பெலியத்த ரயில் நிலையம்

எழுத்தாளர் Staff Writer

12 Apr, 2019 | 7:28 pm

Colombo (News 1st) மக்களுக்காக முன்னெடுக்கப்படும் ஒரு சில அபிவிருத்தித் திட்டங்களின் தரம் அண்மைக்காலங்களில் கேள்விக்குள்ளாகி வருகிறது.

சமீபத்தில் திறந்துவைக்கப்பட்ட பெலியத்த ரயில் நிலையமும் இதற்கு விதிவிலக்கல்ல.

மாத்தறை – பெலியத்த ரயில் பாதை கடந்த 8 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டதுடன், இதற்காக 278.2 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

பெலியத்த பகுதியில் நேற்று (11) பிற்பகல் பலத்த மழை பெய்ததால் ரயில் நிலையத்தில் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன.

பலத்த மழையை அடுத்து ரயில் நிலையத்திற்குத் திரும்பும் பாதையின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது.

ரயில் நிலையத்தின் கூரையும் மழையால் சேதமடைந்துள்ளதுடன், இதனால் நீர் கசிவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

மழையுடன் மின்னல் தாக்கியதில் ரயில் நிலையத்தின் சமிக்ஞை கட்டமைப்பும் செயலிழந்துள்ளது.

சமிக்ஞை கட்டமைப்பு செயலிழந்ததால் இன்று முற்பகல் மருதானையிலிருந்து பெலியத்தவிற்கு பயணித்த ரயில் மாத்தறையில் நிறுத்தப்பட்டு, மற்றுமொரு சிறிய ரயில் மூலம் பயணிகள் ஏற்றிச்செல்லப்பட்டனர்.

திறந்து வைக்கப்பட்டு 5 நாட்களேனும் கடக்காத நிலையில், பெலியத்த ரயில் நிலையத்தில் இவ்வாறான பிரச்சினைகள் எழுந்துள்ளன.

எவ்வாறாயினும், இன்று காலை ரயில் நிலையத்தில் திருத்தப் பணிகள் இடம்பெற்றன.

இந்த நிலைமை தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளர் நிலந்த பெர்னாண்டோவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்ட நிறுவனம் 2 வருட பூரண உத்தரவாதத்தை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும், பெலியத்த ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள இடிதாங்கியின் தரம் தொடர்பில் சந்தேகம் எழுவதாக ரயில்வே பொது முகாமையாளர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் திணைக்களம் விரிவாக ஆராயவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பெலியத்த ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் வினவுவதற்காக குறித்த ஒப்பந்த நிறுவனத்தின் அதிகாரியொருவரை தொடர்புகொள்ள பல தடவைகள் நியூஸ்ஃபெஸ்ட் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்