மங்கள சமரவீரவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர எதிர்க்கட்சி திட்டம்

by Bella Dalima 11-04-2019 | 7:32 PM
Colombo (News 1st) நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் பின்னர் 4 நாட்களுக்கு முன்னர் நிதி தொடர்பான செயற்குழுவில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமை வகிப்பதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். பல்வேறு முக்கிய பொருளாதாரத் தரவுகளை வௌிப்படையாக நிதி அமைச்சு பாராளுமன்றத்திற்கு மறைத்துள்ளதாகவும், துல்லியமற்ற வகையில் தகவல்களை வழங்கியுள்ளதாகவும், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நிதி செயற்குழு குறிப்பிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இந்த மோசடியான வரவு செலவுத் திட்டம் தொடர்பில், பக்கசார்பற்ற பொருளாதார ஆய்வொன்றை இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும், போலியான வரவு செலவுத் திட்டம் தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விவாதித்துள்ளனர் என பந்துல குணவர்தன கூறினார். மேலும், அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வருமாறு, எதிர்க்கட்சியின் பொருளாதார ஆய்வுப்பிரிவு என்ற வகையில், கட்சித்தலைவர்களிடம் தான் கூற விரும்புவதாகவும் நம்பிக்கையில்லா பிரேரணையைத் தயாரிக்கும் பணிகளை புதுவருடத்தில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.