மக்களவைத் தேர்தல்: 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு

இந்திய மக்களவைத் தேர்தல்:  900 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி

by Bella Dalima 11-04-2019 | 5:57 PM
Colombo (News 1st) உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கும் மக்களவைத் தேர்தல் இன்று ஆரம்பமானது. 18 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களைக் கொண்ட 91 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது. இம்முறை பொதுத்தேர்தலில் 900 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு ஆரம்பமாவதற்கு முன்னரே, ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற ஆந்திராவில் 25 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், அங்கு 318 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 17 உறுப்பினர்கள் தெரிவாகவுள்ள தெலங்கானாவில் 443 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். உத்தர பிரதேசத்தில் இன்று காலை வாக்காளர்களுக்கு மேள தாளங்கள் முழங்க மலர்தூவி வரவேற்பளிக்கப்பட்டது. இந்தத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறுகின்றது. ஆந்திராவிலுள்ள 175 சட்டப்பேரவைக்கும், சிக்கிம் மாநிலத்திலுள்ள 32 சட்டப்பேரவைக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒடிசாவில் உள்ள 142 சட்டப்பேரவையில் முதற்கட்டமாக 28 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது ஸ்னைபர் துப்பாக்கியில் பயன்படும் லேசர் ஒளி தென்படுவதால், அவரின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரி காங்கிரஸ் கட்சி மத்திய உள்துறை அமைச்சிற்கு கடிதம் அனுப்பியுள்ளது. அமேதி தொகுதியில் நேற்று (10) ராகுல்காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தபோது, அவரின் தலை, முகம் ஆகிய பகுதியில் 7 முறை பச்சை நிறத்தில் லேசர் ஒளி தென்பட்டதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ராகுல் காந்தியின் தந்தை ராஜிவ் காந்தி, பாட்டி இந்திரா காந்தி ஆகியோர் கொல்லப்பட்ட காரணத்தால், ராகுல் காந்திக்கு சிறப்பு பிரிவு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பளித்து வருகின்றனர். எவ்வாறாயினும், அது ஸ்னைப்பர் துப்பாக்கியின் லேசர் ஒளி அல்ல, கையடக்கத் தொலைபேசி ஒளி என மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, வாக்குப் பதிவு நடைபெறுகின்ற சில மாநிலங்களில் இன்று வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்தன. ஆந்திராவில் தெலுங்கு தேசம் மற்றும் YSR ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் சில பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் தடியடிப் பிரயோகம் மேற்கொண்ட காட்சிகளையும் இந்திய ஊடகங்கள் வௌியிட்டுள்ளன. ஆந்திர மாநிலத்தில் வாக்காளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவிருந்த 116 கோடி இந்திய ரூபாவும், 101 கிலோகிராம் தங்கமும், 24 கோடி இந்திய ரூபா பெறுமதியான மதுபானமும் கடந்த சில தினங்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து முக்கிய கட்சிகளும் வாக்காளர்களுக்கு 1000 ரூபா பணம், சேலைகள், தங்க நகைகள், மதுபானம் போன்றவற்றை வழங்குகின்றமை தெரியவந்துள்ளதாக மாநில பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதற்கமைய இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக டெல்லியில் பாரதிய ஜனதாக் கட்சியின் செல்வாக்கு மேலோங்குவதற்கான வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 7 கட்டங்களைக் கொண்ட இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு மே மாதம் 19 ஆம் திகதி நிறைவுபெறவுள்ளது. வாக்கெண்ணும் பணிகள் மே மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்திய மக்களவையின் 543 ஆசனங்களில் குறைந்தது 272 ஆசனங்களைப் பெறுகின்ற கட்சி அல்லது கூட்டணி ஆட்சியமைக்க தகுதிபெறும்.