ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தயாராகும் நைராஸ் நிறுவனம்

by Staff Writer 10-04-2019 | 9:15 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கு ஆலோசனை வழங்கிய நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய கட்டணத்தை செலுத்தாமையினால் குறித்த நிறுவனம் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தயாராவதாக அறியக்கிடைத்துள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவையை அரச மற்றும் தனியார் ஒன்றிணைந்த திட்டமாக மறுசீரமைப்பதற்கு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அரச மற்றும் தனியார் கூட்டு பிரதிநிதிகள் குழுவின் தலைவர் திலான் விஜேசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகித்தனர். பிரித்தானியாவை கேந்திரமாகக் கொண்ட நைராஸ் (Nyras) என்ற நிறுவனமே ஆலோசனை வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டது. பிரதமர் முன்னெடுத்த செயற்திறனற்ற குழுவினால் எடுக்கப்பட்ட சதித்திட்டங்களின் பிரதிபலன்கள் காரணமாகவே இன்று ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் சுதந்திர ஊடக சங்க பிரதம செயலாளர் ஹசந்த யசரத்ன குறிப்பிட்டார். இந்த இழப்பீட்டுத் தொகையை ஶ்ரீலங்கன் விமான சேவை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும், ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட சூழ்ச்சியாளர்கள் இழப்பீட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஹசந்த யசரத்ன தெரிவித்தார்.