மின்சாரத்தடை இன்று நள்ளிரவுடன் முடிவு

மின்சாரத்தடை இன்று நள்ளிரவுடன் முடிவு

by Staff Writer 10-04-2019 | 7:05 AM
Colombo (News 1st) மின்சாரத்தடை இன்று நள்ளிரவின் பின்னர் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மின்தேவையை பூர்த்திசெய்யும் வகையில் தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அவர் நேற்று குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில, நீண்டகால மின்சார கொள்வனவு தொடர்பான பிரேரணை ஒன்றை, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சரவையில் நேற்று சமர்ப்பித்துள்ளார். எனினும், அது தொடர்பில் மேலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்து, பிரேரணை நிறைவேற்றப்படவில்லை. கடந்த 22 நாட்களாக தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்ட மின்வெட்டினால் நாடளாவிய ரீதியில் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கினர். எனினும், மின்வெட்டு அமுல்படுத்தபடாது என கூறுவது நடைமுறை சாத்தியமற்றது என இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டுள்ளார். தற்போது நிலவும் மின் நெருக்கடிக்கு மத்தியில், பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளை வழங்கும் வீதத்தை மட்டுப்படுத்தினால், மின்சார உற்பத்தி மேலும் சிக்கலுக்கு உள்ளாகும் என இலங்கை மின்சார சபை குறிப்பிடுகின்றது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தவேண்டிய அதிக கடன் காரணமாக, இவ்வாறான நிலை ஏற்படலாம் என மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதேவேளை, மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட நட்டத்திற்காக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.