சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் சலுகை; வட்டியை குறைக்குமாறும் கோரிக்கை

by Staff Writer 10-04-2019 | 8:34 PM
Colombo (News 1st) சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை 2 வீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்தார். அதிக வட்டி வீதத்தினால் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கைத்தொழிலாளர்கள் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர், இது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. மத்திய வங்கியின் நிதிச்சபையின் முன்னாள் உறுப்பினரான நிஹால் பொன்சேகாவின் தலைமையிலான இந்த குழுவில், மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் H.A. கருணாரத்ன, பட்டயகணக்காய்வாளர் நிறுவனத்தின் தலைவர் ஜகத் பெரேரா மற்றும் மலீன் ஜயசிங்க ஆகியோர் அடங்குகின்றனர். அத்துடன், DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி லக்ஷ்மன் சில்வா, ஹட்டன் நெஷனல் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜொனத்தன் அலஸ் மற்றும் கமர்ஷல் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி நந்தித்த புத்திபால ஆகியோரும் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.