இன்றிலிருந்து மின்வெட்டு இல்லை; மின் கட்டணம் அதிகரிக்கப்படாது – ரவி கருணாநாயக்க உறுதி

இன்றிலிருந்து மின்வெட்டு இல்லை; மின் கட்டணம் அதிகரிக்கப்படாது – ரவி கருணாநாயக்க உறுதி

எழுத்தாளர் Bella Dalima

10 Apr, 2019 | 8:16 pm

Colombo (News 1st) இன்று (10) நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என மின்சக்தி, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று உறுதிப்படுத்தினார்.

இன்று நள்ளிரவு 12 மணியின் பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என ரவி கருணாநாயக்க உறுதியளித்தார்.

மேலும், வீட்டுப் பாவனைக்கான மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் கட்டணம் குறையுமே தவிர அதிகரிக்க வாய்ப்பில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில், மேலதிகமாக 100 மெகாவாட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு நேற்று (09) அமைச்சரவை அனுமதி வழங்கியது.

அதன்படி, Agrico International Project நிறுவனத்தின் பல்லேகல மற்றும் Galle Grid உப மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து ஒரு கிலோவாட் மின்சாரம் 30 ரூபா 20 சதம் வீதம், 34 மெகாவாட் மின்சாரம் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

Altaaqa Alternative Solutions நிறுவனத்தின் மஹியங்கனை Grid உப மின் உற்பத்தி நிலையத்திலிருந்து கிலோவாட் மின்சாரம் 30 ரூபா 58 சதம் வீதம் 10 மெகாவாட் மின்சாரம் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

அத்துடன், பொலன்னறுவை கிரிட் உப மின் நிலையத்தில் இருந்து, கிலோவாட் மின்சாரம் 30 ரூபா 63 சதம் வீதம் 8 மெகாவாட் மின்சாரம் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

T-Power நிறுவனத்தின் ஹம்பாந்தோட்டை உப மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து, கிலோவாட் மின்சாரம் 28 ரூபா 43 சதம் வீதம் 24 மெகாவாட் மின்சாரம் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

அந்நிறுவனத்தின் ஹொரணை உப மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து, கிலோவாட் மின்சாரம் 28 ரூபா 70 சதம் வீதம் 24 மெகாவாட் மின்சாரம் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இதேவேளை, தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கான குறுங்கால நடுத்தர மற்றும் நீண்ட கால செயற்பாடுகள் தொடர்பிலான சிபாரிசுகளை முன்வைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தக் குழுவில் அமைச்சர்களான மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, கபீர் ஹாசிம் மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்