மின் கொள்வனவு தொடர்பான பிரேரணை சமர்ப்பிப்பு

மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என்கிறார் அமைச்சர்; நடைமுறை சாத்தியமற்றது என்கின்றன தொழிற்சங்கங்கள்

by Bella Dalima 09-04-2019 | 9:23 PM
Colombo (News 1st) நீண்டகால மின்சாரக் கொள்வனவு தொடர்பான பிரேரணையொன்றை மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சரவையில் இன்று சமர்ப்பித்தார். எனினும், அது தொடர்பில் மேலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்து இன்றைய தினம் பிரேரணை நிறைவேற்றப்படவில்லை. 21 நாட்களாக தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட மின்வெட்டினால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில், இரண்டு பிரிவுகளின் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாகவும் நிரந்தர மின் உற்பத்தி திட்டத்தை செயற்படுத்த ஒன்றரை வருடங்கள் செல்லும் எனவும் மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார். எனினும், இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜயலால் பின்வருமாறு கூறினார்,
350 மெகாவாட் மின்சாரமே பிரச்சினை என பொது பயன்பாட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டுகின்றது. இதனை எம்மால் சுயமாக உற்பத்தி செய்ய முடியும். தனியார் பிரிவுகளில் இருந்து அரச நிறுவனங்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து, தேசிய கட்டமைப்பில் இருந்து அவர்களை நீக்கினால், ஏதேனுமொரு சலுகை அடிப்படையில் அவர்கள் கட்டணங்களை செலுத்தி, பாரியளவிலான வர்த்தகர்களுக்கு குறைவாக செலுத்தி இலாபத்தை ஈட்ட முடியும். அமைச்சர் அதனையே கூறுகின்றார். நாட்டின் பல தொழிற்துறைகள் 10 ஆம் திகதியளவில் பாரியளவில் மூடப்படும். குறித்த நிறுவனங்கள் மின்சாரத்தை பயன்படுத்தாத பட்சத்தில், ஓரளவு எம்மால் விநியோகிக்க முடியும். எவ்வாறாயினும், சவாலொன்று காணப்படுகின்றது. அந்நிறுவனங்கள் 20 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும். தவிர்க்க முடியாத வெசாக் பண்டிகையும் வருகின்றது.
தற்போது நிலவும் மின் நெருக்கடிக்கு மத்தியில், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளை வழங்கும் வீதத்தை மட்டுப்படுத்தினால், மின்சார உற்பத்தி மேலும் சிக்கலுக்கு உள்ளாகும் என இலங்கை மின்சார சபை குறிப்பிடுகின்றது. பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய அதிகக் கடன் காரணமாக இவ்வாறான நிலை ஏற்படலாம் என மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.