நாலக்கவிற்கு விளக்கமறியல்; நாமலுக்கு பாதுகாப்பு

நாலக்க டி சில்வாவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்; நாமல் குமாரவிற்கு பாதுகாப்பு

by Bella Dalima 09-04-2019 | 5:29 PM
Colombo (News 1st) பிரமுகர் கொலை சதி முயற்சி தொடர்பில் கைது செய்யப்பட்ட, பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாலக்க டி சில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரமுகர் கொலை சதி முயற்சிக்கான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு கிடைத்துள்ள சாட்சியங்கள் அடங்கிய அறிக்கையை அடுத்த வழக்கு விசாரணையின் போது மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பிரமுகர் கொலை சதி முயற்சி தொடர்பில் முதலாவதாக அம்பலப்படுத்திய, ஊழலுக்கு எதிரான படையணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவிற்கு பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் சட்டத்தின் பிரகாரம் தகுந்த பாதுகாப்பை வழங்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமது கட்சிக்காரர் உயிருக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை கருத்திற்கொள்ளாது இவ்வாறான பாரிய சதிமுயற்சி ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளதாகவும் இதன் காரணமாக தற்போது அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் நாமல் குமார சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி அஜித் பிரசன்ன மன்றுக்கு அறிவித்துள்ளார். அரசியல்வாதிகள், பாதாள உலகக் குழுவினர் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளிடமிருந்தும் தமது கட்சிக்காரரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி அஜித் பிரசன்ன நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரதிவாதி சார்பில் ஆஜராகிய சட்டத்தரணியால் கடந்த வழக்கு விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கையான , நாலக்க டி சில்வாவை நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிப்பது தொடர்பில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான நாலக்க டி சில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கான ஆதாரம் என்ன என்பது தொடர்பில் விசாரணை அதிகாரிகளால் மன்றுக்கு இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என அறிவித்த நீதவான், அறிக்கை கிடைததன் பின்னர் பிணை கோரிக்கை தொடர்பில் கட்டளை பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, நாமல் குமாரவிற்கு பாதுகாப்பு வழங்குமாறு அவரின் சட்டத்தரணியால் கோரிக்கை விடுக்கப்பட்ட போது , குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் மன்றில் ஆஜராகி இருந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் முனசிங்க, சந்தேகநபர் வசிக்கும் வீட்டிற்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இரவு வேளையில் சுமார் 04, 05 மணித்தியாலங்கள் நாமல் குமாரவின் வீட்டிற்கு வரகாபொல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பாதுகாப்பு வழங்குவதாகவும் வழக்கு விசாரணைக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்து செல்லும் போதும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணி அஜித் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார். இந்த கோரிக்கைக்கு அமைய, பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் சட்டத்தின் பிரகாரம் நாமல் குமாரவிற்கு பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.