கடற்படை முன்னாள் தளபதியிடம் வாக்குமூலப் பதிவு நிறைவு

by Staff Writer 09-04-2019 | 12:08 PM
Colombo (News 1st) கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யும் நடவடிக்கை நிறைவுபெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று (9ஆம் திகதி) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். 2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகநபரான அட்மிரல் வசந்த கரனாகொடவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொழும்பு - கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் பதிவுசெய்யப்பட்டுள்ள வாக்குமூலத்தின் உண்மைத் தன்மை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, அடுத்த வழக்கு விசாரணையின்போது விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதன்போது, கடத்தல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் லெப்டினன் கொமாண்டர்களான பிரசாத் ஹெட்டியாரச்சி மற்றும் நிலந்த சம்பத் முனசிங்க உள்ளிட்ட 7 சந்தேகநபர்களும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.