காற்று மாசால் 49 இலட்சம் பேர் வரை உயிரிழப்பு

கடந்த ஆண்டில் காற்று மாசால் 49 இலட்சம் பேர் வரை உயிரிழப்பு

by Bella Dalima 09-04-2019 | 5:57 PM
கடந்த 2017 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் காற்று மாசால் 49 இலட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சுகாதாரத் தாக்கங்களை ஆய்வு செய்யும் நிறுவனமொன்றினால் இது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் கருவிகளைப் பயன்படுத்தி, சுமார் 10,000 கண்காணிப்பு கருவிகளினூடாக காற்று மாசு குறித்து சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு இந்த முடிவு வௌியிடப்பட்டுள்ளது. சுத்தமற்ற காற்றின் மூலம் மனிதர்களின் ஆயுட்காலம் சராசரியாக 20 மாதங்கள் வரை குறைவடைய வாய்ப்புள்ளதாக குறித்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் உள்ள மக்கள் அதிகளவில் காற்று மாசால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் பிறக்கும் குழந்தைகள் சுத்தமற்ற காற்றால் தமது வாழ்வின் 30 மாதங்களை இழக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபடுவதைத் தடுக்க உலகிலேயே முதன்முறையாக லண்டன் நகரில் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் மாசுக் கட்டுப்பாட்டு மண்டலம் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. லண்டனில் நகரின் உள்ளே இயக்கப்படும் வாகனங்களின் புகை வெளியிடும் அளவில், பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்கள் யூரோ 4 தர நிலையிலும், டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் யூரோ 6 தர நிலையிலும் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அன்றாடம் அபராதம் விதிக்கப்படுகிறது. வாகன ஓட்டுனர்கள் வண்டியின் புகை தரநிலைகளை லண்டன் போக்குவரத்துத்துறை செயற்படுத்தும் ஒன்லைன் கருவி மூலம் சோதனை செய்து கொள்ளலாம். காற்றில் கொடிய நைட்ரஜன் ஒக்ஸைடு கலக்க அதிக அளவில் வாகனங்களின் புகையே காரணமாகும். பாரிய தொழிற்சாலைகளில் இருந்து வௌியாகும் புகையும் காற்று மாசடையக் காரணமாகவுள்ளது.