தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அமைச்சர்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கட்டாயமானதல்ல - கல்வி அமைச்சர்

by Staff Writer 08-04-2019 | 11:50 AM
Colombo (News 1st) தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றுவது கட்டாயமானது இல்லை என, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் நிதிக்கான வரையரைக்கு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைத் தவிர்ந்த ஏனையவர்கள் பரீட்சைக்கு தோற்றுவது அவசியம் இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றாத மாணவர்களுக்கு இதனால் எவ்வித சிக்கல்களும் ஏற்படாது என 8/2019 சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மாணவர்களின் எண்ணத்திற்கும் பெற்றோரின் விருப்பத்திற்கும் அமைய, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எழுத வேண்டுமா? இல்லையா? என தீர்மானிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். எனினும், இந்த பரீட்சையை இரத்து செய்வது தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, ஆறாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும்போது, வசதிக் கட்டணம், பாடசாலை அபிவிருத்திக் கட்டணம் உள்ளிட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள கட்டணங்களுக்கு மேலதிகமாக ஏனைய நிதி அல்லது நன்கொடைகளை பெற்றோர்களிடம் அறிவிடுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சில பாடசாலைகளில் ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை ஆறாம் தரத்திற்கு இணைத்துக் கொள்ளும் பாடசாலைகளில், முறையற்ற விதத்தில் பணம் அறவிடப்படுவதாக கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக மேற்கொள்ளக்கூடிய மாற்று திட்டங்கள் தொடர்பில் பரிந்துரைக்குமாறு, கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட மீளாய்வு குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்தத் தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.