சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு விளையாட்டுக் கழகங்கள் கடிதம்

சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு விளையாட்டுக் கழகங்கள் கடிதம்

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2019 | 8:40 pm

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான திலங்க சுமதிபால, கிரிக்கெட் நிறுவனத்தில் பதவி வகிப்பதை சவாலுக்குட்படுத்தி 3 விளையாட்டுக் கழகங்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் கடிதம் எழுதியுள்ளன.

கொல்ட்ஸ், நீர்கொழும்பு மற்றும் மாரவில சேவியர் விளையாட்டு கழகங்களே இவ்வாறு இந்தக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளன.

தமது சகோதரர் சூதாட்ட வர்த்தகத்தில் ஈடுபடுவதாக திலங்க சுமதிபால பாராளுமன்றத்தில் கூறியதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஹன்சார்ட் அறிக்கையும் குறித்த கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

சூது விளையாட்டுக்கு வரி செலுத்துவது தொடர்பிலான அறிக்கையும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் அனுப்பப்படவுள்ள கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

திலங்க சுமதிபால இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறை​வேற்றுக் குழுவின் முகாமையாளர் சபையின் அங்கத்தவராகவும் தேசிய அபிவிருத்திக் குழுவின் அங்கத்தவர் மற்றும் சர்வதேச உறவுகள் மற்றும் தேசிய திட்டங்களின் தலைவராகவும் செயற்படுவது விளையாட்டு சட்டத்துக்கு முரணானது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒழுக்க நெறிமுறைகளின் கீழ் இவ்வாறான சூது விளையாட்டுடன் தொடர்புடைய ஒருவர் கிரிக்கெட்டுடன் சம்பந்தப்படுவது தவறானது என குறித்த கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கவனம் செலுத்தி பூரணமான விசாரணையை மேற்கொள்ளுமாறு குறித்த 3 விளையாட்டு கழகங்களும் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்