யூதக்குடியேற்றங்கள் மீண்டும் இஸ்ரேலுடன் இணைப்பு

யூதக்குடியேற்றங்களை இஸ்ரேலுடன் இணைப்பதாக பிரதமர் தெரிவிப்பு

by Staff Writer 07-04-2019 | 8:22 AM
Colombo (News 1st) மேற்குக்கரையிலுள்ள ஆக்கிரமிக்கப்பட்ட யூதக்குடியேற்றங்கள் இஸ்ரேலுடன் இணைக்கப்படும் என, அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ( Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் நாளை மறுதினம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தாம் மீண்டும் வெற்றிபெற்று பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டால் இந்த நடவடிக்கையினை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, 4 இலட்சத்துக்கும் அதிகமான யூதர்களை மேற்குக்கரை குடியேற்றங்களில் இஸ்ரேல் குடியமர்த்தியுள்ளது. மேலும், 2 இலட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் கிழக்கு ஜெருசலேமில் வசித்துவருகின்றனர். இதேவேளை, 2.5 மில்லியன் பலஸ்தீனியர்கள் மேற்குக்கரையில் வசித்து வருகின்றனர். தாம் வசித்துவரும் குறித்த மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காஸா எல்லைப்பகுதிகளை இணைத்ததாக, ஒரு அரசை நிறுவ வேண்டுமென்பது பலஸ்தீனியர்களின் தேவையாகும். ஆனால், இந்தக்குடியேற்றங்கள் காரணமாக தமக்கான தனியான அரசை நிறுவுவது இயலாததாகி விடுமென பலஸ்தீனியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இருப்பினும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் இந்த அறிவிப்பானது, சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இஸ்ரேலில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள தேர்தலில், மேற்குக்கரை இணைப்புக்கு ஆதரவு வழங்கும் வலதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து பிரதமர் நெதன்யாஹு போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.