கடனுக்காக பங்குகள் பரிமாற்றப்படவில்லை - அம்பலம்

துறைமுக விடயத்தில் கடனுக்காக பங்குகள் பரிமாற்றப்பட்டவில்லை

by Fazlullah Mubarak 07-04-2019 | 8:24 PM

சீன நிறுவனமொன்றுடன் முன்னெடுக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுக கொடுக்கல் வாங்கலில் கடனுக்காக பங்குகள் பரிமாற்றப்பட்டவில்லை என சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

துறைமுகம் தொடர்பில் செலுத்தப்பட வேண்டிய கடனுக்காக பங்குகள் பரிமாற்ற வகையில் இந்தக் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாக, ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்காக சீன நிறுவனமொன்றுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடும்போது அரசாங்கம் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியது. இதற்கமைய, துறைமுக நிர்மாணப்பணிக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் சீ.எம்.போர்ட் என்ற சீன நிறுவனம் அந்த துறைமுகத்தின் பங்குகளுக்காக பொறுப்பேற்றமையே ஹம்பாந்தோட்டை துறைமுக கொடுக்கல் வாங்கல் மூலம் இடம்பெறவேண்டிருந்தது. எனினும், குறித்த கடன் இலங்கை துறைமுக அதிகார சபையின் வங்கிக்கணக்குகள் மூலம் திறைசேரிக்கு மாற்றப்பட்டுள்ளமை மாத்திரமே இடம்பெற்றுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசாங்கம் இந்தக் கடனையும் வட்டியையும் செலுத்தி வருவதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் முன்னிலை வகித்தவர்களில் முதலீட்டு சபையின் பணிப்பாளர்களில் ஒருவராக செயற்பட்ட மங்கள யாபா பிரதானமானவர். அத்துடன், அவ்வேளையில் துறைமுக அமைச்சராக செயற்பட்ட மஹிந்த சமரசிங்க மற்றும் அவ்வேளையில் துறைமுக அதிகார சபையின் தலைவராக செயற்பட்ட கலாநிதி பராகிரம திசாநாயக்கவும், இதனுடன் தொடர்புபட்டுள்ளார். எனினும், இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஒரு தரப்பாக முன்நின்ற துறைமுகங்கள் அதிகார சபையின் முன்னாள் தலைவர் பராக்கிரம திசாநாயக்க தான் அதிகார சபையின் தலைவராக செயற்பட்ட காலத்தில் இடம்பெற்ற இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதை நிராகரித்தார். தான் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுவதாகத் தெரிவித்து அதனை அவர் நிராகரித்தார். இலங்கையின் ஊடகங்கவியலாளர்கள் மற்றும் நல்லாட்சிக்காக முன்நின்றவர்கள் எமது நாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடிகள், முறைகேடுகள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர். உரிய தரவுகளை மேற்கோள்காட்டியே இவர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்தத் தகவல்களை வௌியிட்டனர். எனினும், இதில் எதனையும் கருத்திக்கொள்ளாமல் குறித்த அதிகாரிகள் தமக்குத் தேவையான விதத்தில் செயற்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும். இவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கையாக எடுக்கப்பட வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.