சந்தாவாக 130 மில்லியன் சுருட்டிய தொழிற்சங்கங்கள்

சந்தாப்பணமாக 130 மில்லியன்களை சுருட்டிய மலையக தொழிற்சங்கங்கள்

by Fazlullah Mubarak 07-04-2019 | 8:30 PM

மலையக பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் 130 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகையை சந்தாப்பணமாக பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

முக்கிய தொழிற்சங்கங்கள் வருடமொன்றுக்கு 77 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகையை சந்தாப் பணமாக பெற்றுள்ளதாக சிலோன் டுடே பத்திரிகை இன்று செய்தி வௌியிட்டுள்ளது. மாற்றம் எனப்படும் அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டமூடாக தொழிற்சங்கங்கள் பெறும் சந்தாப்பணத்தின் பெறுமதி தொடர்பில் சிலோன் டுடே பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வருடமொன்றில் 77.7 மில்லியன் ரூபாவை தொழிலாளர்களிடமிருந்து சந்தாப்பணமாக அறவிட்டுள்ளது. அதாவது, 2016 ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து 2017 மார்ச் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், 77, 751,933 ரூபாவை சந்தாப்பணமாக பெற்றுக்கொண்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர் ஒருவரிடமிருந்து மாதாந்தாம் 150 ரூபாவை அறவிட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டமூலமாக தெரியவந்துள்ளது. வடிவேல் சுரேஷை பொதுச்செயலாராளகக் கொண்ட இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கமும் தொழிலாளர் ஒருவரிடமிருந்து மாதாந்தாம் 150 ரூபாவை அறவிட்டுள்ளது. இதற்கமைய, அதே காலப்பகுதியில் இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் 22,437,558 ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளது. தேசிய தொழிலாளர் சங்கம், 3 கோடியே 45 இலட்சம் ரூபாவை (34,524,328.41) என சந்தாப் பணமாக பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இதேவேளை, பெருந்தோட்டத்தில் தற்போது ஒன்றரை இலட்சம் தொழிலாளர்களே தொழில் புரிவதாக தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் திணைக்களம் வசமிருக்கும் 3 தொழிற்சங்கங்களின் தொகை மட்டும் ஐந்தரை இலட்சத்தைத் தாண்டுவதாக மாற்றம் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. புதுப்பிக்கப்படாத அங்கத்தவர் விபரங்களை வருடாந்தம் தொழிற்சங்கங்கள் அனுப்புவதுடன், அந்தத் தரவுகளேதொழில் திணைக்களத்திடமும் காணப்படுவதாக அந்த அமைப்பு கூறுகின்றது.