by Staff Writer 07-04-2019 | 7:10 AM
Colombo (News 1st) ஐ.பி.எல். கிரிக்கட் தொடரில் நேற்று நடைபெற்ற 19ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதனடிப்படையில், முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்திலிருந்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்துகொண்டே வந்தது.
16.3 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 86 ஓட்டங்களையே பெற்றிருந்தது.
இந்தநிலையில், 7ஆவது விக்கெட்காக களமிறங்கிய கைரன் பொலாட் அதிரடியாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை இறுதி நேரத்தில் அதிகரித்தார்.
26 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகளை விளாசி 42 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
ஏனைய வீரர்கள் 20இற்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றனர்.
இதனடிப்படையில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் S கவுல் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
137 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக விக்கெட்களைப் பறிகொடுத்தது.
அந்த அணி சார்பாக DJ கூடா மாத்திரம் 20 ஓட்டங்களை அதிகபட்டமாகப் பெற்றார்.
ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 17.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 40 ஓட்டங்களால் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி தோல்வியைத் தழுவியது.
பந்துவீச்சில் அல்ஸாரி ஜோசப் 6 விக்கெட்களை வீழ்த்தியதுடன், போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் அவரே தெரிவானார்.