லசித் மாலிங்கவின் காலி அணிக்கு இரண்டாவது வெற்றி

Super Four: லசித் மாலிங்கவின் காலி அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது

by Staff Writer 06-04-2019 | 8:15 PM
Colombo (News 1st) மாகாண அணிகளுக்கு இடையிலான Super Four ஒருநாள் கிரிக்கெட் தொடரில் லசித் மாலிங்க தலைமையிலான காலி அணி தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இதேவேளை, கொழும்பு அணிக்கு எதிரான போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி கண்டி அணி 3 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் காலி அணியும் தம்புள்ளை அணியும் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி சார்பாக லஹிரு திரிமான்னே 82 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 89 ஓட்டங்களையும் பெற்றனர். மத்திய வரிசையில் மிலிந்த சிறிவர்தன 65 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள காலி அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 345 ஓட்டங்களைப் பெற்றது. பந்து வீச்சில் இஷான் ஜெயவர்தன 3 விக்கெட்களை கைப்பற்றினார். 346 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாட களமிறங்கிய தம்புள்ளை அணி சார்பாக அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் அதிகபட்சமாக 75 ஓட்டங்களைப் பெற்றார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தனுஸ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரால் பெரிதாக பிரகாசிக்க முடியவில்லை. தம்புள்ளை அணி 269 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழக்க , போட்டியில் 76 ஓட்டங்களால் காலி அணி வெற்றியீட்டியது. இதேவேளை, கண்டி பல்லேகலையில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் கொழும்பு மற்றும் கண்டி அணிகள் மோதின. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்களைப் பெற்றது. கொழும்பு அணி சார்பாக ஷெஹான் ஜெயசூரிய 2 சிக்சர்கள் 9 பவுண்டரிகளுடன் சதம் கடந்த நிலையில் 115 ஓட்டங்களைப் பெற்றார். வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய கண்டி அணி 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களை பெற்றிருந்த போது போதிய வெளிச்சமின்மையால் போட்டி சுமார் 20 நிமிடங்கள் தடைப்பட்டது. இறுதியில் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி கொழும்பு அணி 3 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.