மாலைத்தீவு பாராளுமன்றத் தேர்தல் இன்று நடைபெற்றது

மாலைத்தீவு பாராளுமன்றத் தேர்தல்: 87 ஆசனங்களுக்காக 386 வேட்பாளர்கள் போட்டி

by Bella Dalima 06-04-2019 | 7:52 PM
Colombo (News 1st) மாலைத்தீவு பாராளுமன்றமான People's Majlis-இற்கு 87 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மக்கள் வாக்களித்ததாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது. மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி Mohamed Nasheed மற்றும் சபாநாயகர் Qasim Ibrahim ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். 87 ஆசனங்களுக்காக 386 வேட்பாளர்கள் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். 501 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவுகள் சுமூகமான முறையில் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெரும்பான்மையைப் பெறுவதற்கு 44 ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டிய நிலையில், தமது ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெறுமென ஜனாதிபதி இப்ராஹிம் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். இதேவேளை, வெளிநாடுகளிலும் வாக்குப் பதிவுகள் நடைபெற்றன. குறிப்பாக இலங்கை மற்றும் இந்தியாவில் காலை 8.30 அளவில் வாக்குப்பதிவுகள் ஆரம்பாகியதுடன், மலேசியா மற்றும் லண்டனில் காலை 9.30 அளவில் வாக்குப்பதிவுகள் ஆரம்பமாகின. தேர்தல் முடிவுகள் ஏப்ரல் 12 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.