ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் அசாதாரண மின் தடை ழுமுமையாக நிறுத்தப்படும்: ரவி கருணாநாயக்க

by Staff Writer 06-04-2019 | 9:11 PM
Colombo (News 1st) கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளமை காரணமாக நகர்ப்பகுதி மக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர். கொழும்பு மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாதங்களாக களுத்துறை, வாதுவ உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் குடிநீரில் உவர் நீர் கலந்துள்ளமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மின் தடை ஏற்பட்டு இன்றுடன் 18 நாட்களாகின்றன. இதன் காரணமாக சாதாரண மக்கள் முதல் சிறிய மற்றும் பாரிய வர்த்தகத்தில் ஈடுபடுவோர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னறிவித்தலின்றி மின் தடை ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர். மின் தடை கால அட்டவணை தொடர்ந்தும் நீடிக்கப்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறினார். எதிர்வரும் 13 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மின்சாரத்தினை வழங்க முடியும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார். எவ்வாறாயினும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் இந்த அசாதாரண மின் தடை ழுமுமையாக நிறுத்தப்படும் என இன்று குறிப்பிட்டார். எனினும், மின்சாரத்தை மட்டுப்படுத்தி பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.