இலங்கையில் உயிர் அச்சுறுத்தல்: மாகந்துரே மதுஷின் மனு விசாரிக்கப்படவுள்ளது 

by Staff Writer 06-04-2019 | 4:55 PM
Colombo (News 1st) இலங்கைக்கு நாடு கடத்துவதைத் தடுக்குமாறு கோரி பிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷ் துபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, எதிர்வரும் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இலங்கைக்கு நாடு கடத்துவதால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக மாகந்துரே மதுஷ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குறித்த மனுவை ஆராய்ந்த பின்னர், பிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்டோரை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. துபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட சிலர், இலங்கையில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்குழுவினர் நாட்டிற்கு வருகை தந்ததும் அவர்களைக் கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷூடன் துபாயில் கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.