ஆதிச்சநல்லூர் பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமையானவை 

ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் சுமார் 3000 ஆண்டுகள் பழமையானவை: கார்பன் ஆய்வில் தகவல்

by Bella Dalima 06-04-2019 | 5:59 PM
Colombo (News 1st) தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என கார்பன் பரிசோதனை அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருட்களை அமெரிக்காவில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்தப் பரிசோதனையின் முடிவில் ஒரு பொருள் கி.மு. 905 ஆண்டுக்குரியதெனவும் மற்றொன்று கி.மு. 791ஆம் ஆண்டுக்குரியதெனவும் தெரியவந்துள்ளது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் தூத்துக்குடி மாவட்டத்தின் திருநெல்வேலி நகரில் இருந்து 24 கிலோமீட்டர் தென்கிழக்காக, தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. இது உலக அளவில் பலமுறை அகழ்வுகளும் ஆய்வுகளும் செய்யப்பட்ட நகரங்களில் ஒன்று எனும் சிறப்பைப் பெற்றுள்ளது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் 1868-இல் இங்கு அகழ்வுப் பணிகளைத் தொடங்கியதுடன், ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1886-இல் இங்கு இனப்பகுப்பாய்வு தொடர்பான ஆய்வினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.