விலகிய இராணுவத்தினருக்கு பொதுமன்னிப்புக் காலம்

சேவையில் இருந்து விலகிய இராணுவ உறுப்பினர்கள் சட்டரீதியாக விலக பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு

by Staff Writer 06-04-2019 | 3:58 PM
Colombo (News 1st) சேவையில் இருந்து விலகியுள்ள இராணுவ உறுப்பினர்கள் சட்டரீதியாக விலகுவதற்கான பொதுமன்னிப்புக் காலம் இராணுவ தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 10 ஆம் திகதி வரை இந்த பொதுமன்னிப்புக் காலம் அமுலில் இருக்கும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரையின் பேரில் இந்த பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். விடுமுறை இல்லாமல் சேவையில் இருந்து விலகிச்சென்றுள்ள அனைத்து இராணுவ உறுப்பினர்களையும் இலக்கம் 04 இன் அடிப்படையில் சேவையில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டார். எதிர்வரும் 22 ஆம் திகதியின் போது 21 நாட்களுக்கு அதிகக்காலம் விடுமுறை இல்லாமல் சேவையில் இருந்து விலகியுள்ள அதிகாரிகள் மற்றும் 22 ஆம் திகதி 6 மாதங்கள் அல்லது 180 நாட்களுக்கு அதிகக் காலம் விடுமுறை இல்லாமல் சேவையில் இருந்து விலகியுள்ள அதிகாரிகள் சட்டரீதியாக சேவையில் இருந்து விலக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. விடுமுறையில்லாமல் 6 மாதங்களுக்கு அதிகக் காலம் சேவையில் இருந்து விலகிய இராணுவ உறுப்பினர்கள் விருப்பத்தின் அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.