இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தின் முதலீட்டாளர் தொடர்பில் மற்றுமொரு வௌிக்கொணர்வு

இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தின் முதலீட்டாளர் தொடர்பில் மற்றுமொரு வௌிக்கொணர்வு

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2019 | 9:28 pm

Colombo (News 1st) ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய முதலீடு தொடர்பில் பிரதமர் சுட்டிக்காட்டிய போதிலும், குறித்த திட்டம் தொடர்பான பிரச்சினைக்குரிய பல விடயங்களை நாட்டு மக்கள் தற்போது அறிந்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு ஓமான் மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் என்ற போர்வையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

மிரிஜ்ஜவில எண்ணெய் சுத்திகரிப்பு திட்ட முதலீடு தொடர்பில் பல்வேறு தரப்பினர் பல கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

அவற்றுக்கு உரிய பதில் வழங்காது மற்றுமொரு எண்ணெய் சுத்திகரிப்பு திட்ட முதலீடு தொடர்பில் பிரதி அமைச்சர் நலீன் பண்டார அண்மையில் தகவல் வௌியிட்டிருந்தார்.

அவர் கூறும் வகையில், இந்தத் திட்டத்திற்கு சிங்கப்பூரிலுள்ள சுஜீ எனர்ஜி இன்டர்நெஷனல் என்ற நிறுவனம் முதலீடு செய்யத் தயாராகவுள்ளது.

14 பில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்யத் தயாராகவுள்ள சுஜீ எனர்ஜி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் தாய் நிறுவனம் இந்தோனேஷியாவின் பீ.டீ. சுஜீ நிறுவனம் என்பதை நியூஸ்ஃபெஸ்ட் முன்னதாக சுட்டிக்காட்டியிருந்தது.

பனாமா ஆவணங்களின் ஊடாக வௌிக்கொணரப்பட்ட நிறுவனமொன்றே இதுவென்பதையும் நியூஸ்ஃபெஸ்ட் குறிப்பிட்டிருந்தது.

இந்த பின்புலத்தில், இந்தோனேஷியாவின் பீ.டீ. சுஜீ நிறுவனம், இலங்கையின் முறிகள் மோசடி மற்றும் இந்தோனேஷியாவில் இடம்பெற்ற மோசடியுடனும் தொடர்புபட்ட நிறுவனம் என தற்போது தகவல் வௌியாகியுள்ளது.

அந்த நிறுவனத்தின் அதிகப் பங்குகளுக்கு உரித்துடைய கியூ எட்வட் சொயாத் ஜாயா என்ற நபர், 2014 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் ஓய்வூதிய நிதியத்தின் நிதி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர் என சர்வதேசத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஓய்வூதிய நிதியத்தின் பங்குகள் கொடுக்கல் வாங்கலின் ஊடாக பெறப்பட்ட நிதி, இலங்கையின் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு திட்ட முதலீட்டாளரின் தாய் நிறுவனமான பீ.டீ. சுஜீ நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதன் ஊடாக 42 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிக நட்டம் இந்தோனேஷியாவிற்கு ஏற்பட்டுள்ளது.

அவருக்கு 18 வருடங்கள் சிறைத்தண்டனையை வழங்குமாறும் அந்நாட்டு அரச தரப்பினர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அடிக்கல் நாட்டப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம் தொடர்பில், கடந்த 24 ஆம் திகதி அறிக்கையொன்றை வௌியிட்ட டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம், இந்தத் திட்டத்தின் ஊடாக நிதி தூய்தாக்கல் இடம்பெறுவதற்கான அபாயம் நிலவுவதாக சுட்டிக்காட்டியிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்