14 பில்லியன் டொலர் பெறுமதியான மற்றுமொரு எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம் 

14 பில்லியன் டொலர் பெறுமதியான மற்றுமொரு எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம் 

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2019 | 8:24 pm

Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில், அவ்வாறான மற்றுமொரு திட்டம் தொடர்பில் பிரதி அமைச்சர் நலீன் பண்டார வௌிக்கொணர்ந்தார்.

உத்தேச புதிய திட்டம் பாரிய முதலீடொன்று என்பது அவரின் கருத்தின் ஊடாக புலப்படுகின்றது.

அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நலீன் பண்டார, அரச தகவல் திணைக்களத்தில் ஊடக சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்து, முதலீடு தொடர்பில் தௌிவூட்டினார்.

இதன்போது, 14 பில்லியன் டொலர் பெறுமதியான மற்றுமொரு எண்ணெய் சுத்திகரிப்பு திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதற்கென 400 இலட்சத்து 20 ஆயிரம் பெரல்கள் வரவுள்ளதாகவும் சிங்கப்பூர் நிறுவனம் இது குறித்து நேற்று (04) கலந்துரையாடியதாகவும் கூறினார்.

காணியொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தால், இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க முடியும் எனவும் நலீன் பண்டார தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் கூறும் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்திற்கு, சிங்கப்பூரிலுள்ள ‘சுஜீ எனர்ஜி இன்டர்நெஷனல்’ என்ற நிறுவனமே முதலீடு செய்யத் தயாராவதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

இது 14 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடாகும்.

இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், மேலும் 24 பில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவுள்ளதாக பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான பாரிய முதலீடொன்றை மேற்கொள்ளத் தயாராகவுள்ளதாகக் கூறப்படும் முதலீட்டாளர் யார்?

சுஜீ எனர்ஜி இன்டர்நெஷனல் நிறுவனத்தின், தாய் நிறுவனம் இந்தோனேஷியாவின் பீ.டீ.சுஜீ நிறுவனமாகும்.

பீ.டீ.சுஜீ நிறுவனம் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள சில்வர் ஃபோரஸ்ட் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.

பீ.டீ. சுஜீ நிறுவனம் தொடர்பில் பனாமா ஆவணங்களின் ஊடாக வௌிக்கொணரப்பட்டுள்ளமை நியூஸ்ஃபெஸ்ட் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் பாரிய முதலீட்டை செய்வதற்கு முன்வந்துள்ள இந்நிறுவனம், சட்டப்பூர்வமற்ற வரிச்சலுகைகளை பெற்றுக்கொள்வதற்காக, பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலன்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என பனாமா ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்திற்கு, சில்வர் பார்க் இன்டர்நெஷனல் நிறுவனம் முதலீடு செய்துள்ளதுடன், உத்தேச புதிய திட்டத்தின் முதலீட்டாளர் சில்வர் ஃபோரஸ்ட் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்