ஜெஃப்ரி அலோசியஸ் உள்ளிட்ட ஐவருக்கு பிணை

முறிகள் மோசடி: ஜெஃப்ரி அலோசியஸ் உள்ளிட்ட ஐவருக்கு பிணை

by Bella Dalima 05-04-2019 | 6:28 PM
Colombo (News 1st) மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப்ரி அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வௌிநாடு செல்வதற்கும் நீதவானால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும், தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான 4 சரீரப் பிணைகளிலும் செல்ல முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப்ரி அலோசியஸ் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் ஏனைய மூன்று பணிப்பாளர்களுக்கும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 6 சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிணை வழங்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள், பொது சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளனரா என்பது குறித்து விசாரணை முன்னெடுக்கப்படுவதாக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரிய ஜயசுந்தரம் மன்றுக்கு அறிவித்துள்ளார். இந்த விடயம் உறுதிப்படுத்தப்படுமாயின், சந்தேகநபர்களை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.