தமிழ் தந்தி பத்திரிகைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

by Staff Writer 05-04-2019 | 6:04 PM
Colombo (News 1st) தமிழ் தந்தி பத்திரிகையில் பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பான கட்டுரை பிரசுரிக்கப்பட்டமை குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் அந்தோனிசாமி பீட்டர்போல் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழ் தந்தி பத்திரிகை சார்பில் சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் மன்றில் ஆஜராகியிருந்தார். மனுதாரர் சார்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மன்றில் ஆஜராகியிருந்தனர். பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரையை எழுதிய ஊடகவியலாளரும் மன்றில் இன்று ஆஜராகினார். தமிழ் தந்தி பத்திரிகையில் வௌியாகிய பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பான கட்டுரைக்கான மூலத்தை வௌியிடுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று மன்றில் கோரியிருந்தனர். தமிழ் தந்தி பத்திரிகையானது கொழும்பை தளமாகக் கொண்டது எனவும், யாழ்ப்பாண அதிகார எல்லைக்குள் அது இல்லை எனவும் சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். ஏனைய பத்திரிகைகளிலும் இது தொடர்பான கட்டுரை பிரசுரமாகியிருந்தது எனவும் மன்றுக்கு அறிவிக்கப்பட்டது. இராணுவ மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவால் எழுதப்பட்ட "ROAD OF NANTHIKADAL" நூலிலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தளபதிகள் குறித்து ஏற்கனவே தகவல் வௌியாகியுள்ளதாகவும் சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் மன்றுக்கு சுட்டிக்காட்டியுள்ளார். ஊடக சுதந்திரத்திற்கு அமைய குறித்த கட்டுரைக்கான மூலத்தை வௌியிட முடியாது என தமிழ் தந்தி பத்திரிகை சார்பில் சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் மன்றுக்கு அறிவித்துள்ளார். இவற்றை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனிசாமி பீட்டர்போல் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.