சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற 26 பேர் கிளிநொச்சியில் கைது

by Staff Writer 05-04-2019 | 5:38 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற 26 பேர் கிளிநொச்சி - கனகபுரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 13 வயதான சிறுவன் ஒருவனும் அடங்குவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்தது. கனகபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் இவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், முல்லைதீவு, மட்டக்களப்பு, கல்முனை, கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை குறிப்பிட்டது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த முகவர் ஒருவருக்கு பணம் செலுத்தி இவர்கள் கனடாவிற்கு செல்ல முயன்றுள்ளனர். ஒரு இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3ஆம் திகதி கனகபுரம் பகுதியிலுள்ள குறித்த வீட்டிற்கு இவர்கள் சென்றுள்ளனர். அங்கிருந்து 45 நாட்களுக்குள் படகு மூலம் கனடா அழைத்துச் செல்வதாக முகவர் அறிவித்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.