கந்தளாய் பிரதேச சபை செயலாளருக்கு கடூழிய சிறை 

கந்தளாய் பிரதேச சபையின் முன்னாள் செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

by Staff Writer 05-04-2019 | 3:42 PM
Colombo (News 1st) திருகோணமலை - கந்தளாய் பிரதேச சபை செயலாளராகக் கடமையாற்றிய பஸ்நாயக்க அப்புஹாமிலாகே ஐவன் வசந்த திசேராவிற்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபைக்கு சொந்தமான 30 இலட்சம் ரூபா அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, பிரதேச சபையின் செயலாளருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் 90 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு கந்தளாய் பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய போது, சபையின் வங்கி கணக்கில் இருந்து 30 இலட்சம் ரூபா நிதியைப் பெற்று, அரை மணித்தியாலத்திற்குள் அதனை தனது பெயரில் தனிப்பட்ட கணக்கில், நிலையானை வைப்பில் முதலீடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுமார் 04 மாதங்களின் பின்னர் தனது சேமிப்பு கணக்கிற்கு அந்த பணத்தை பிரதேச செயலாளர் மாற்றியுள்ளார். சம்பவம் தொடர்பில் சட்ட மா அதிபரால் 2011 ஆம் ஆண்டு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதேச சபை ஊழியர்கள், வங்கி முகாமையாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் இது குறித்து சாட்சியம் வழங்கியுள்ளனர். அபராதம் விதிக்கப்பட்டுள்ள 90 இலட்சம் ரூபா நிதியை குற்றவாளியின் அசையும், அசையா சொத்துக்களை பறிமுதல் செய்து அறிவிட வேண்டும் எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். 2010 ஆம் ஆண்டிற்கு பின்னர், அவரின் சொத்துக்கள் மனைவி மற்றும் பிள்ளைகளின் பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பின் அவற்றையும் பறிமுதல் செய்து பகிரங்க ஏலத்தில் விற்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.