அலரி மாளிகையில் MCC நிறுவனம் இயங்கவில்லை: அமெரிக்க தூதுவராலயம் அறிவிப்பு

by Staff Writer 05-04-2019 | 4:46 PM
Colombo (News 1st) அமெரிக்க அரசாங்கத்தினுடைய Millennium Challenge Corporation நிறுவனம் அலரி மாளிகையில் இயங்குவதாக பாராளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் சாகல ரத்நாயக்க அவ்வாறான அலுவலகம் அலரி மாளிகையில் இயங்கவில்லை என உறுதிப்பட கூறியிருந்தார். எனினும், Millennium Challenge Corporation நிறுவனம் அலரி மாளிகையில் இயங்குவதை உறுதிப்படுத்தும் ஆவணம் என கூறி ஆவணம் ஒன்றை விமல் வீரவன்ச சமர்ப்பித்திருந்தார். இது தொடர்பில் அறிந்துகொள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு மின்னஞ்சல் ஒன்றை நியூஸ்ஃபெஸ்ட் அனுப்பியிருந்தது. குறித்த மின்னஞ்சலுக்கு பதிலளித்துள்ள அமெரிக்க தூதுவராலம், அவ்வாறான நிறுவனம் அலரி மாளிகையில் இயங்கவில்லை என தெரிவித்துள்ளது. எனினும், ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்காக நபரொருவர், இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தில் சேவையாற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறாயின், விமல் வீரவன்ச சமர்ப்பித்த ஆவணக் கடிதத் தலைப்பிற்கு பின்னால் இருப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. Millennium Challenge Corporation நிறுவனத்தின் தேசிய ஆலோசகர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என ஆர். சிறிவர்தன என்ற நபரை மேற்கோள்காட்டி, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வருகை தரும் Millennium Challenge Corporation நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு, அமைச்சர் கயந்த கருணாதிலக்கவுடன் பெப்ரவரி மாதம் 26 அல்லது 27 ஆம் திகதி கலந்துரையாடலொன்றை ஒழுங்கு செய்யுமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அலரி மாளிகையின் புதிய கட்டடத் தொகுதியின் வடக்கு பகுதியிலுள்ள வளாகத்தின் இரண்டாவது மாடி, Millennium Challenge Corporation நிறுவனத்தின் இலங்கை அலுவலகம் என அதில் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்க தூதரகத்தின் அறிக்கைக்கு அமைய, அவ்வாறான அலுவலகமொன்று இலங்கையில் இல்லை என்றால், சிறிவர்தன என்ற நபர் அலரி மாளிகையின் முகவரியை போலியாகக் கூறியுள்ளாரா? பிரதமரின் அனுமதியுடனா, அலரி மாளிகையின் பகுதியொன்றில், இவ்வாறு உத்தியோகப்பூர்வமற்ற வகையில் அலுவலகமொன்று நடத்திச் செல்லப்படுகின்றது?