நுண் கடன் திட்டத்தை அரசாங்கம் இரத்து செய்ய வேண்டும்: மஹிந்த ராஜபக்ஸ

by Bella Dalima 04-04-2019 | 8:43 PM
Colombo (News 1st) நுண் கடன் நிறுவனங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களின் கடனை இரத்து செய்வதாக அரசாங்கம் தொடர்ந்து கூறிய போதிலும், கடன் வழங்கிய நிறுவனங்களை இனங்காண முடியாமையினால் இதுவரையில் கடனை இரத்து செய்ய முடியாமற்போயுள்ளது என மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார். பதிவு செய்யப்பட்ட நுண் கடன் நிதி நிறுவனங்களை விடவும் தனிப்பட்ட கடன் வழங்குனர்கள் நாடு முழுதும் வியாபித்துள்ளதாகவும் கடனுக்காக வருடமொன்றுக்கு 30 தொடக்கம் 100 வீத வட்டி அறவிடப்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார். கடனை செலுத்த தாமதமாகும் போது அச்சுறுத்தல் விடுப்பது மாத்திரமின்றி பல்வேறு வகையில் இலஞ்சம் வாங்கும் செயற்பாடும் பரவலாக இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார். மேலும், பாதாள உலகக் கோஷ்டியினர் தொடர்புபட்டு முன்னெடுக்கும் இந்த நெருக்கடியினால் மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைவதாகக் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஸ, நுண் கடன் திட்டத்தை அரசாங்கம் இரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நிதி சேவைகளை கீழ் மட்டத்தில் உருவாக்க வேண்டும் எனவும் சாதாரண மக்களுக்கே வங்கிக் கடன்களை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். கிராமத்திலுள்ள நிதியை எடுத்து வந்து அரசாங்கம் கொழும்பிலுள்ளவர்களுக்கு வழங்குவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றஞ்சாட்டினார்.

ஏனைய செய்திகள்