மக்களிடம் மன்னிப்பு கோரினார் அல்ஜீரிய ஜனாதிபதி

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் அல்ஜீரிய ஜனாதிபதி

by Chandrasekaram Chandravadani 04-04-2019 | 10:23 AM
Colombo (News 1st) அல்ஜீரிய ஜனாதிபதி அப்டெலாஸிஸ் போட்விலிக்கா (Abdelaziz Bouteflika) நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அந்நாட்டு ஊடக சேவை மையத்தினால் பிரசுரிக்கப்பட்டுள்ள கடிதம் ஒன்றிலேயே குறித்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தனது பங்களிப்பு தொடர்பில் பெருமையடைவதாகவும் ஆனால், தனது கடமையில் தோற்றுவிட்டதாகவும் அப்டெலாஸிஸ் போட்விலிக்கா தெரிவித்துள்ளார். கடந்த 20 வருட காலமாக அல்ஜீரிய ஜனாதிபதியாகப் பதவி வகித்து வந்த அப்டெலாஸிஸ் போட்விலிக்கா, அவரது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக நேற்று முன்தினம் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். இதேவேளை, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்ததோடு, ஓய்வுபெறுமாறு அல்ஜீரிய இராணுவத் தளபதியும் கோரியிருந்தார். இதனையடுத்து, அவர் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.