தில்ஹாரவிற்கு எதிராக 3 குற்றச்சாட்டுகள்

தில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகள்: 14 நாட்களுக்குள் வாக்குமூலம் அளிக்க வேண்டும்

by Staff Writer 04-04-2019 | 10:25 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிராக ஆட்ட நிர்ணயம் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் மோசடி தடுப்பு சட்டத்தின் மூன்று சரத்துக்களை தில்ஹார லொக்குஹெட்டிகே மீறியுள்ளதாக ஐ.சி.சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆட்ட நிர்ணயம், அதற்கான திட்டங்களை பயன்படுத்தல் அல்லது ஆட்ட நிர்ணயத்துக்கான திட்டங்களை முன்னெடுப்பதற்காக வேறு தரப்பினருடன் தொடர்புபடல் மற்றும் வற்புறுத்தல் ஆகியன தில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள முதலாவது குற்றச்சாட்டாகும். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் மோசடி தடுப்பு சட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மீறுவதற்காக வற்புறுத்தியமை, ஊக்குவித்தமை என்பன அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டாகும். ஊழல் செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவையால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது தேவையான தகவல்களை ஊழல் தடுப்பு பிரிவுக்கு வழங்கத் தவறியமை அல்லது பகிரங்கப்படுத்தாதிருந்தமை என்பன தில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிரான மூன்றாவது குற்றச்சாட்டாகும். ஐக்கிய அரபு இராச்சியத்தில் சமீபத்தில் நடைபெற்ற பத்துக்கு 10 ஓவர்கள் கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பாக தில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றை பரிசீலித்த சர்வதேச கிரிக்கெட் பேரவை அவருக்கு போட்டித்தடை விதித்தது. இதற்கமைய, குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தில்ஹார லொக்குஹெட்டிகே 14 நாட்களுக்குள் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் வாக்குமூலம் அளிக்க வேண்டியுள்ளது.