சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவை

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவை

by Staff Writer 04-04-2019 | 7:08 AM
Colombo (News 1st) சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாளை (5ஆம் திகதி) முதல் விசேட பஸ் போக்குவரத்து இடம்பெறவுள்ளது. இதற்கமைய, நாளை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இரு கட்டங்களாக இந்த விசேட பஸ் போக்குவரத்து இடம்பெறவுள்ளது. இதன் முதற்கட்டமாக கொழும்பிலிருந்து 1500 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபையின் நேர அட்டவணை மற்றும் திட்டமிடல் முகாமையாளர் சஜீவ டிலுக்‌ஷ குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், சாதாரண நாட்களில் கொழும்பிலிருந்து 1350 பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய, மேலதிக பஸ்களுடன் பண்டிகைக் காலங்களில், சுமார் 5800 பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக சஜீவ டிலுக்‌ஷ மேலும் தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலம் நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் கொழும்பிற்குத் திரும்பும் பயணிகளுக்காக, இரண்டாம் கட்டத்தில் விசேட பஸ் போக்குவரத்து சேவையும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இதேவேளை, சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 10 திகதி முதல் விசேட ரயில் போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பதுளை, யாழ்ப்பாணம் மற்றும் பெலியத்த வரை விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தநிலையில், ஏனைய பகுதிகளுக்கு, தேவைக்கேற்ப ரயில் சேவைகள் இடம்பெறும் எனவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.