by Bella Dalima 04-04-2019 | 5:35 PM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பில் பாதுகாப்பு பிரிவினரிடம் கலந்துரையாடி செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு இரண்டு மாகாணங்களினதும் ஆளுநர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்களூடாக தீர்வு காண முடியாத பிரச்சினைகள் குறித்து அடுத்த கூட்டத்தின் போது அறிவிக்குமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
எதிர்வரும் மே மாதத்திற்குள் வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பு நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் 6951 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 475 ஏக்கர் காணி மாத்திரமே விடுவிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.