புதைகுழி எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டன

மன்னார் மனிதப் புதைகுழியில் எலும்புக்கூடுகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன

by Staff Writer 03-04-2019 | 5:36 PM
Colombo (News 1st) மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்த எலும்புக்கூடுகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மேலதிகமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த எலும்புக்கூடுகளே அப்புறப்படுத்தப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். கடந்த மாதம் 23 திகதி மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று (02) மாலை மனிதப் புதைகுழியானது முழுமையாக சீர் செய்யப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டு மேலதிகமாக காணப்பட்ட அனைத்து மனித எலும்புக்கூடுகளும் புதைகுழியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், குறித்த மனிதப் புதைகுழியானது சிறியளவில் அகலப்படுத்தப்பட்டு மூன்று மாத காலப்பகுதிக்கு மூடப்படவுள்ளது. இந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாகவும் மண் படைகள் தொடர்பாகவும் அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். நேற்று மாலை இடம்பெற்ற சீரமைக்கும் பணியில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ, பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.